
திருவண்ணாமலை மாவட்டத்தில் துவங்கி விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கிறது தென்பெண்ணையாறு. இந்த ஆற்றில் தளவானூர் அருகே கடந்த 2019 அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதியில் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டது. 2020 ஏப்ரல் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டது. இதன் தென்கரை பகுதியில் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் எனதிரிமங்கலம் உள்ளது. இந்த தடுப்பணை மூலம் 2 மாவட்ட கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் 67 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்கும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டது.
இந்த அணையின் தடுப்புச் சுவர் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டு, அதில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதையடுத்து, உடனடியாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைத்தனர். தடுப்பணையின் பாதுகாப்பு கருதி உடைப்பெடுத்த பகுதியில் மண் சுவரை எழுப்பி மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் டேம் நிரம்பி, ஆயிரத்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வந்தது. அதன் காரணமாக நேற்று (11.11.2021) இரவு ஒருமணி அளவில் தளவானூர் புனரமைப்பு செய்யப்பட்ட தடுப்பணை பகுதி மண் கரைந்து உடைப்பெடுத்து தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

அணைக்கட்டின் ஓரப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஷட்டர் முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் கடலை நோக்கிச் சென்று வீணானது. இதனால் விவசாயிகள், அப்பகுதி கிராம மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர். தகவல் அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் எம்.எல்.ஏக்கள் விழுப்புரம் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி புகழேந்தி, அரசு சார்பில் மழை வெள்ள சேதங்களைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி மதுவிலக்கு பிரிவு டிஐஜி கபில் குமார் சரத்கரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் நேற்று காலை அணைக்கட்டைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பொன்முடி, “கடந்த ஆண்டே இந்த அணைக்கட்டு இடிந்தது குறித்து புகார் செய்துள்ளோம். அதனடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இந்த அணைக்கட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அணைக்கட்டின் இரு கரைகளையும் தரமான அளவில் சீரமைப்பதற்கு 15 கோடி மதிப்பீட்டில் தரமான திட்டம் தயாரிக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.