Minister Ponmudi meeting with the Chief Minister

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதையொட்டி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வைத்து விசாரணை 4 மணி நேரம் மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசினார். முன்னதாக நேற்று அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், “துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும்” என அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.