Skip to main content

சங்கரய்யா விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம்; பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த அமைச்சர்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Minister Ponmudi boycotts Madurai Kamaraj University graduation ceremony

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ் சமூகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடியவர் சங்கரய்யா. அப்படிப்பட்டவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார். ஏன் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆளுநருக்கு சமூகநீதி, திராவிட மாடல், சமத்துவம் என்று பேசுபவர்களை பிடிப்பதில்லை. 102வது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க மறுப்பதன் காரணம் என்ன? ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

 

மருது சகோதரர்கள் தொடர்பான விழாவில், தமிழகம் சுந்திர போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அண்ணா தொடங்கி தற்போது இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் உரிய மரியாதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு உரிய மரியாதையளிக்க ஆளுநர் மறுக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர்; அவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை பார்த்தாலே பிடிக்காது. அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்ததால்தான் ஆளுநரும் அப்படியே நடந்துகொண்டிருக்கிறார்.

 

ஆளுநர் ஒரு நடிப்பு சுதேசி. அரசியலுக்கு வந்தது முதல் ஆளுநர்களை பார்த்திருக்கிறேன்; ஆனால் இப்படி ஒரு மோசமான ஆளுநரை பார்த்ததே இல்லை. சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு வலியுறுத்தினோம்; அதனையடுத்து பல்கலைக்கழக சிண்டிகேட்டும் முடிவு செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவர் ஒப்புதல் தர மறுத்துள்ளார். அதனால்தான் நாளை மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்