Minister orders inspection in restaurants

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதில் அந்த தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உள்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.அதே சமயம் இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை இரவு சவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வாங்கி சிறுமியின் உறவினர்கள் சாப்பிட்டுள்ளனர். பின்பு சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று காலை படுக்கையிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

Advertisment

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உணவகத்தில் சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் குமார், சஞ்சய் மகத்கூத், தபாஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிரில் சிக்கன், சவர்மா உணவுகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிரில் சிக்கன் மற்றும் சவர்மா உணவுகளை தயாரிக்கும் உணவகங்களை ஆய்வு செய்யவும், உரிய நெறிமுறைகளை பின்பற்றாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீதும் உரிய நடவடிகை எடுக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.