ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சிஎம்டிஏ முறைகேடாக ஒப்புதல் வழங்குவதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், இன்று (08/06/2022) காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலையின் புகாருக்கு பதிலளித்துள்ளார். அப்போது, அவர் கூறியதாவது, "சிஎம்டிஏவில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த 1976- ஆம் ஆண்டில் இருந்து சிஎம்டிஏவில் சிஇஓ பதவி இருந்து வருகிறது. 40- க்கும் அதிகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சி.இ.ஓ.வாக இருந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகளாக சிஇஓ பதவி நிரப்பப்படாமல் இருந்தது; அதை தி.மு.க. நிரப்பியது.

Advertisment

அண்ணாமலை கூறுவது போல் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 நாட்களிலோ, 6 நாட்களிலோ அனுமதி வழங்கப்படவில்லை. கோவையில் 122 ஏக்கரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில். சிஎம்டிஏவில் ஒற்றை சாளர முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இரண்டு மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.