Minister Murthy explains There is a perverse motive in claiming bribery for deed registration

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக மதுரையில் அண்ணாமலை பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறையில் அரசு விதித்துள்ள கட்டணத்திற்குக் கூடுதலாக மேலும் ஒரு தொகை கட்ட பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்குச் செல்லும் இந்த கட்டணத்தொகையை வசூலிக்கத்தமிழகம் முழுவதும் புரோக்கர்களை அமைச்சர் நியமித்துள்ளார்.

Advertisment

பத்திரப்பதிவுத் துறையில் இமாலய அளவில் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவுத் துறை வசூல் துறையாக மாறி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் தினமும் பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினால் கோடி கோடியாக பணம் சிக்கும்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இக்குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பதிவுத்துறையில் நாள்தோறும் நடைபெறும் பதிவுகளில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை தனியே கையூட்டாகப் பெறப்படுகிறது என்றும், அது துறையின் அமைச்சரின் பெயரில் வசூலிக்கப்படுகிறது என்றும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு திரிக்கப்பட்ட ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும். எனவே, பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை கொண்டு வர வேண்டிய தேவையில்லை. மேலும், ஆவணங்கள் பதிவு செய்கையில் இடைத்தரகர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 581 சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படி விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை தினமும் பதிவு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்று கற்பனையான பொய்களால் புனையப்பட்ட செய்தியாகும். இப்படியான செய்திகளை பரப்பப்படுவது விபரீதமான உள்நோக்கம் கொண்டதாகும்.

Advertisment

கையூட்டு தொடர்பான விரிவான புகார்களை நேரடியாகவோ, பதிவுத்துறை தலைவருக்கோ அல்லது மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கோ அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கோ அனுப்பலாம். இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தாளர்களோ அல்லது சார்பதிவாளர்களோ பொதுமக்களிடம் ஆவணப் பதிவுக்காக கையூட்டு கேட்டால் 9498452110, 9498452120, 9498452130 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகாரைத் தெரிவிக்கலாம்.

மேலும், அமைச்சரின் பெயரிலோ அல்லது அதிகாரிகளின் பெயரிலோ ஆவணப்பதிவிற்கு என்று கையூட்டு கேட்டால், இது தொடர்பான புகார்களை [email protected] என்ற e-Mail முகவரியில் தகுந்த மேல் நடவடிக்கைக்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு செயலாளருக்கு நேரடியாக அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.