ADVERTISEMENT

“பன்னீர் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள்” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டிப்பு

05:52 PM Dec 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று கடலூரில் நடந்த மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சுமார் 5,000 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் மட்டும் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகையில் சர்க்கரை பச்சரிசியுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது மக்களின், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுடன் பன்னீர் கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசில் பன்னீர் கரும்பும் வழங்கப்பட உள்ளது. பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் புகுந்து விளையாடினார்கள். அதனால் தற்போது பொங்கல் கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களை தவிர்க்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பன்னீர் கரும்புகள் எந்தெந்த பகுதியில் கொள்முதல் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத் துறை, வேளாண் துறை தான் முடிவு செய்யும். கரும்பு கொள்முதல் செய்வது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படும். உண்மையான விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். பன்னீர் கரும்பு கொள்முதல் செய்தலில் இடைத்தரகர்கள் தலையிட்டால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிச்சயமாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

மேலும் அவர், “எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ அப்போது மட்டுமே என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தது தொடர்பாகவும், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாகவும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் தி.மு.க ஆட்சி காலத்தில் தான் என்.எல்.சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சம், அதன் பிறகு ரூபாய் 15 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 25 லட்சமாக தற்போது உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடையில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் என்.எல்.சி தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதற்கு கூட அனுமதிக்கப்படாமல் எங்களது குரல் வளைகள் நெறிக்கப்பட்டன. ஆனால் தற்போது மூன்று முறை அனுமதி வழங்கியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை. என்.எல்.சி விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் நாங்கள் அல்ல” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT