Minister MRK Panneerselvam retaliates to EPs for kalaignar Park Affair

Advertisment

சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால், ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ அமைக்கப்பட்டது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி (07.10.2024) திறந்து வைத்தார். இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் போன்றவை சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் 500 மீட்டர் கொண்ட ஜிப்லைனில் நேற்று (12.10.2024) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ஜிப்லைனில் பயணித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் சிக்கிக் கொண்டதாகவும், இதனால் அப்பெண்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர் எனவும் கூறப்பட்டது. மேலும், இதனைக் கவனித்த பூங்கா ஊழியர்கள் 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த பூங்காவிற்கு திமுக அரசு கட்டணம் வசூலிக்கிறது. எனவே பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரியப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Minister MRK Panneerselvam retaliates to EPs for kalaignar Park Affair

Advertisment

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஜிப்லைன் விவகாரம் குறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (13.10.2024) மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருப்பது மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம். எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை.

மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்குத் தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். அதன் பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர். ஆகவே எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழையப் பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.