Minister MRK Panneerselvam gave education loans to students

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கிகளுடன் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழிற்கடனை வழங்கி பேசினார்.

Advertisment

அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களது உயர்கல்வி அடைவதற்கு பொருளாதாரம் ஒரு மாபெரும் தடையாக உள்ளது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகின்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

இன்றைய முகாமில் 153 மாணவர்களுக்கு ரூ.10.84 கோடி கல்விக் கடனும், பல்வேறு அரசு மானியக்கடன் திட்டங்களின் மூலம்64 பயனாளிகளுக்கு ரூ.10:37 கோடி தொழிற்கடனும், மொத்தம் 217 பயனாளிகளுக்கு 21.21 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கெளரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.