
திருச்சியில் இன்று வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
வணிகர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “தமிழக அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பத்திரப்பதிவு துறையில் தவறிழைக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி குறைபாடுகளை கலைந்து ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவை பொறுத்தவரை முறையாக நிலங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு முறையை மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பத்திரப் பதிவுகளில் நடைபெற்ற அனைத்து குற்ற குறைகள் கண்டறியப்பட்டு தவறிழைத்தோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பை சரி செய்வதற்கு அதற்கான கட்டுப்பாட்டு அறையும் ஆணையர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
ஒன்றிய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு தான் மேற்கொள்ள முடியும். மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும். வணிகர் நல வாரியத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இணையலாம். 40 லட்சத்திற்கும் குறைவான வணிகம் செய்பவர்களும் இதில் உறுப்பினராக முடியும்” என்றார்.