Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி; வறுமையிலும் சாதித்த மாணவியின் கல்விக்கு உதவிய அமைச்சர்!

Minister Meyyanathan who helped student Abhinaya, who achieved poverty in Pudukkottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நடந்து முடிந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்று 4 பேர் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளனர். இதில் ஒரு மாணவிதான் அபிநயா. நீட் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து பல்வேறு ஆனலைன்களின் மூலம் படித்து நீட் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 7.5% உள் இடஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கத் தேர்வாகி உள்ள மாணவி அபிநயாவின் குடும்ப வறுமையின் பின்னணி கண்கலங்க வைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி வேலை செய்த ரெங்கசாமி. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மனைவி அன்னபூரணி குடும்ப பாரத்தைச் சுமக்கத் தொடங்கினார். தினக்கூலி வேலை செய்தாலும் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதில், மூத்த பெண் தான் அபிநயா கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு +2 படித்தவர், நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்ன போது மகளின் ஆசையை நிறைவேற்ற அங்குமிங்கும் கடன் வாங்கி திருச்சியில் ஒரு தனியார் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார். ஆனால் போதிய மதிப்பெண் பெறவில்லை. அதனால் வேறு பட்டப்படிப்பு படிக்கலாம் என்று சொன்ன போது குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அபிநயா இந்த முறை எனக்காகக் கடன் வாங்க வேண்டாம். வீட்டிலிருந்தே படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து தன்னிடம் இருந்த புத்தகங்களையும், இணைய வழியில் நீட் தேர்வு பற்றி வரும் பாடங்களையும் ஓய்வு, உறக்கமின்றி படித்திருக்கிறார். சொன்னது போலவே 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தங்கை சுவாதி திருப்பூரில் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படிக்கிறார். தம்பி சபரிவாசன் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறார்.

Advertisment

இது குறித்து அபிநயாவின் தோழிகள் கூறும் போது, “ரொம்ப ரொம்ப வறுமையான குடும்பம். அவங்க அம்மா வீடு வீடாக வேலை செய்து அந்த சம்பளத்தில் இதுவரை படிக்க வச்சுட்டாங்க. மற்ற பிள்ளைகளின் படிப்பு, உணவு, உடை மற்ற தேவைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் இப்ப அபிநயாவுக்கு அட்மிசன் போடப் போகக் கூட அவங்க வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்காங்க. மருத்துவ சீட்டுக்கு முழு கல்வி கட்டணமும் அரசு செலுத்தும். ஆனால் பொருட்கள் வாங்கனும், நடைமுறைச் செலவுகள் உள்ளதே அதற்காக அவங்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர் கண்கலங்கியபடி.

அபிநயாவோ, “அப்பா இல்லை. நாங்க படிக்கனும் என்பதற்காக கீரமங்கலத்தில் ஒரு வாடகை வீட்டுக்கு வந்துட்டோம். அம்மா சில வீடுகளில் வீட்டு வேலை செஞ்சு இதுவரை படிக்க வச்சுட்டாங்க. மறுபடி கோச்சிங் போனா பணம் கட்ட முடியாதென்று வீட்ல இருந்தே படிச்சு இப்ப சீட்டும் வாங்கிட்டேன்” என்று சொல்லும் போதே குரல் கம்மியதை நம்மால் உணர முடிந்தது. இந்த செய்தி நேற்று ஞாயிற்றுக் கிழமை நக்கீரன் இணையத்தில் "அம்மா வீட்டு வேலை செஞ்சி படிக்க வைக்கிறாங்க.." சாதித்த மாணவி என்ற தலைப்பில் மாணவியின் வறுமையின் சாதனை பற்றி விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.

Minister Meyyanathan who helped student Abhinaya, who achieved poverty in Pudukkottai

இந்த செய்தியைப் பார்த்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று காலை நம்மிடம் மாணவியைப் பற்றி தொலைப்பேசியில் கேட்டறிந்தவர் அந்த மாணவியின் கல்வி செலவை நாம் செய்வோம் என்று கூறியதுடன் இன்று மதியம் மாணவியின் வீட்டிற்குச் சென்று வறுமையிலும் சாதித்த மாணவியைப் பாராட்டி சால்வை அணிவித்தார். பின்பு கல்வி உதவித் தொகையும் வழங்கினார். தொடர்ந்து மாணவியிடம், “எதற்கும் கலங்காமல் படிக்க வேண்டும். படிப்பிற்குப் பணம் தடையாக இருக்கக் கூடாது. கல்வி தான் நிரந்தரமான சொத்து. உங்களுக்கு வேறு என்னவெல்லாம் தேவை என்றாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம். கல்விக்காக செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார். அமைச்சரின் கல்வி உதவியைப் பெற்றுக் கொண்ட மாணவி குடும்பம் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

பணம் இல்லாமல் ஏழை மாணவியின் கல்விக்கனவு சிதைந்து போகக்கூடாது என்பதை உணர்ந்துஅமைச்சர் செய்த உதவியை மாணவி குடும்பத்தினர் மறக்கமாட்டார்கள். மாணவி குடும்பத்தினரோடு நக்கீரன் சார்பிலும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

meyyanathan pudukkottai students
இதையும் படியுங்கள்
Subscribe