minister meyyanathan talks about water resources issue in pudukottai district 

Advertisment

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தை அடுத்து இளைஞர்கள் இணைந்து, "இழந்த நீர்நிலைகளைக் காப்போம்! மரங்களை மீட்போம்! இயற்கையை உருவாக்குவோம்!"என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய நீர்நிலை மீட்புப் பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.டெல்டா மாவட்டங்களில் தொடங்கிய நீர்நிலை சீரமைப்பு பணி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. டெல்டா இளைஞர்களின் இந்தத்தீவிர நீர்நிலை மீட்புப் பணியைப் பார்த்து பல்வேறு நிறுவனங்களும், தன்னார்வ சேவை அமைப்புகளும் தானாக முன்வந்து இயந்திரங்கள் உள்பட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த வகையில்தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றக்குடி கிராமத்தில் உள்ள ஆலங்குளம், நாச்சான்குளம், வருசாக்குளம் ஆகிய 450 ஏக்கர் பரப்பளவுள்ள 3 ஏரிகளைதூர்வாரும் பணிக்கான தொடக்க விழாநடைபெற்றது. ரூ.37.50 லட்சம் மதிப்புள்ள புதிய பொக்லைன்இயந்திரத்தைப் பொதுப் பணிகளுக்காக அமெரிக்க வாழ் தமிழர்களான நண்பன் பவுண்டேஷன், மதர்ஸ் பார் மதர் நேச்சர் சக்தி மற்றும் ப்ரீத்தி வழங்கியுள்ளனர். இவர்களுக்காக வேல்காந்த் நேரில் வந்து பொக்லைன் இயந்திரத்தை ஒப்படைத்தார். சித்தார்த் இயந்திர இயக்குநருக்கான செலவினங்களை ஏற்றுள்ளார். பவுன்ஸ் பேக் டெல்டா நிர்வாகிகள் சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.தொடக்க விழா, ஊராட்சி மன்றத் தலைவர் கோசலை காந்தி தலைமையில் 130க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டு சீரமைப்பு செய்ய உதவியாக இருந்த நிமல் ராகவன் முன்னிலையில் நடந்தது.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளைத்தொடங்கி வைத்துப் பேசும்போது, "இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பாலில் விஷம் கலந்தால் என்ன தீமை ஏற்படுமோ அதேபோல் தான் நீர்நிலையில் கழிவுகளைக் கலப்பதால் தீங்கு ஏற்படும். அதனால் நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் உடனே உரிமம் ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளைத்தூர் வாருவதுடன் நின்றுவிடாமல் குறுங்காடுகளையும் அமைத்து வருகிறார்கள். இது பாராட்டத்தக்கது. அந்த மரங்கள் உங்கள் பெயரைச் சொல்லும். அதே போல ஆலங்குடி தொகுதியில் சுமார் 200 குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பின் நாட்களில் யாராவது என்ன செய்தார் என்று கேட்டால் அந்த மரங்கள் பதில் சொல்லும் இயற்கையை வளர்த்தார் என்று.இப்போது பூவற்றக்குடியில் தூர்வாரப்பட உள்ள 3 ஏரிகளிலும் மழைக்காலத்தில் அரை டிஎம்சி தண்ணீரைத்தேக்கி வைக்க முடியும். இதே போல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க இந்த அமைப்புகள் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக அவர்களுக்கு நன்றிகளையும் சொல்கிறோம். தேவைப்பட்டால் நாங்களும் இணைந்து கொள்கிறோம்" என்றார்.

Advertisment

இவ்விழாவில் அறந்தாங்கி கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.