Advertisment

மிகவும் பின்தங்கிய பகுதி குழந்தைகளின் கல்விக்காக வாகன ஏற்பாடு செய்த அமைச்சர் மெய்யநாதன்- தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி!

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் தற்காலிக ஓலை குடிசை அமைத்து நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி கல்வி புகாத இந்தப் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் - தங்கை என இருவர் மட்டுமே கல்லூரி வாசலை மிதித்தவர்கள். விவசாய தினக்கூலி வேலைக்குச் செல்லும் இந்த மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி நினைப்பதில்லை. கூலியாக கிடைக்கும் தொகையில் குடியும் குடித்தனமுமாக இருப்பதே வாழ்க்கை.

கடந்த பல வருடங்களாக தன்னார்வலர்களின் விழிப்புணர்வால் அப்பகுதி குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். பள்ளிகள் தூரமாக இருப்பதால் பல நாட்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அதனால் பள்ளிகளுக்குச் செல்ல வாகன வசதி வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் எழுப்பினர். அதேபோல, கீரமங்கலம் அறிவொளி நகர் பழங்குடியினர் காலனியில் (நரிக்குறவர் காலனி) இருந்தும் பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது பெற்றோர் நாங்கள் தான் படிக்கவில்லை. அதனால பாசி, மணி, ஊசி, பலூன் விற்று பிழைக்கிறோம். ஆனால் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்கனும், எங்க குழந்தைகளும் நல்லா படிச்சு ஆபிசர் ஆகனும் அதுக்காக எங்க குழந்தைகளை நாங்க படிக்க அனுப்புறோம். ஆனால் குழந்தைகள் பிரதான சாலைகளில் ரொம்ப தூரம் செல்ல வேண்டியுள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே எங்கள் குழந்தைகளுக்காக எங்கள் தெருவில் பள்ளி ஒன்றை திறக்க வேண்டும் அல்லது எங்கள் குழந்தைகள் படிக்க போக வேன் வசதி வேண்டும் என்று அடிக்கடி அறிவொளி நகர் நிகழ்ச்சிகளுக்கு வரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

சுக்கிரன்குண்டு, அறிவொளி நகர் மிகவும் பின்தங்கிய மக்களின் இந்த ஒற்றைக் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அமைச்சர் மெய்யநாதன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவையடுத்து முதலில் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலகம் களமிறங்கி பள்ளி செல்லும் வயதுடைய மாணவ, மாணவிகளின் பட்டியலை தயார் செய்து அனைவரும் பள்ளி செல்கிறார்களா என்பதை உறுதி செய்தது. தொடரந்து மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர். கல்வி மற்றும் புள்ளியியல் துறை அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு அரசு மாநிலத் திட்டக்குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அமைச்சர் மெய்யநாதன் சொன்ன மிகவும் பின்தங்கிய பகுதி பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக திருவரங்குளம் ஒன்றியத்தில் சுக்கிரன்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்கள் படிக்கும் அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புளிச்சங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வேன் மூலம் ஏற்றிச் சென்று விடவும் மாலை அழைத்து வரவும் அதே போல கீரமங்கலம் அறிவொளி நகரில் இருந்து கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வேன் வசதி தொடக்க விழா கீரமங்கலம் அறிவொளி நகரில் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் முன்னிலையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு வேன் வசதிக்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதன் திடீரென மயிலாடுதுறை சென்றதால் டிஆர்ஓ தலைமையில் சிஈஓ முன்னிலையில் அமைச்சர் ரகுபதி புதிய பள்ளி வேனை பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அறிவொளி நகரில் தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும் பள்ளிக்கு வேனில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களுடன் வந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

மிகவும் பின்தங்கிய பகுதி குழந்தைகளின் கல்விக்காக வேன் வசதி செய்து கொடுத்த அரசுக்கும், அமைச்சர் மெய்யநாதன், அதிகாரிகளுக்கும் நன்றி கூறினர்.

education pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe