minister ma.subramanian says dont panic about corona spread virus

இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் பரவி வந்த கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, நேற்று ஒரே நாளில் மட்டும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1 பேர் என மொத்த நாட்டில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க தடுப்பூசிகளை போடவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (31-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது.தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் உருமாற்றும் அடைந்து பல பெயர்களில் உலா வருகிறது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது; பதற்றம் வேண்டாம். தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. வீரியம் குறைந்த பாதிப்பே இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பரவல் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டும்” என்று கூறினார்.