/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3488.jpg)
தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளை துணைவேந்தர்கள் கவனிப்பார்கள். துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் தேடல் குழு பரிந்துரை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பார். இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தேடல் குழு மூன்று நபர்களை பரிந்துரை செய்யும், அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த தேடல் குழுவில், ஆளுநரின் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மொத்தம் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஆளுநரின் பிரதிநிதி, தேடல் குழுவின் தலைவராக செயல்படுவார்.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை அவர், அப்போது நடந்த உயர் கல்வி மேம்பாட்டு கருத்தரங்கில் பேசினார். இது அப்போது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்த அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழகன், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் துணைவேந்தரை தேர்வு செய்து நியமிப்பது ஆளுநர்தான் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பன்வாரிலால் புரோகித், பணி காலம் முடிவடைந்து தமிழ்நாட்டில் இருந்து இடமாறுதல் பெற்று பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ. 40-50 கோடிக்கு விற்கப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1138.jpg)
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பன்வாரிலால் தலைமையில் அப்போதைய ஆட்சியில் துணைவேந்தர்கள் பதவி வழங்கப்பட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போன்று, அவர் தற்போது பேசுகிறார். அவரது பதவி காலத்தில் அப்போதைய அரசுக்கு வக்காலத்து வாங்கும் பணியை செய்தார்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)