கிட்னி திருட்டு விவகாரம்; “நிச்சயமாகக் குற்றவாளிகள் தப்பவே முடியாது” - அமைச்சர் பேட்டி!

masu-press-meet-moorthy-mdu

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்று (17.06.2025) காலை முதல் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். 

அதே சமயம் அந்த பகுதியில் கிட்னி விற்பனைக்காக இடைத்தரகா செயல்பட்டது ஆனந்தன் என்பது தெரியவந்தது. இவர் ஏழை தொழிலாளர்களைத் திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் வாங்கி தருவதாகவும், கிட்னியை விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மற்றொருபுறம் கிட்னி விற்பனையில் தரகராகச் செயல்பட்ட ஆனந்தன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அதாவது ஆனந்தனிடம் இது விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது. அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆனந்தனின் வீடும் பூட்டப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழைகளிடமிருந்து சிறுநீரகம் திருடப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசுகையில், “உடல் உறுப்பு தானம் தொடர்பாக இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்திற்கு எதிராக யார் தவறு செஞ்சாலும் அதில் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். குறிப்பாக மூளைச்சாவு அடைந்தவர்களிடத்திலிருந்து பெறப்படுகிற உடல் உறுப்புகள், தாங்களாகவே மனிதநேயத்தோடு தருகிற உடல் உறுப்புகள் இவை தான் உடல் உறுப்பு தானத்திற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தான் உடலுறுப்பு தானத்திற்கு என்று ஒரு ஆணையத்தை அமைத்து இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக உடல் உறுப்பு தானத்தைச் செய்ய முன்னெடுத்தார். 

அந்த வகையில் இந்தியாவில் தொடர்ச்சியாகத் தமிழ்நாடுதான் உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்பவர்களைக் கௌரவிக்கிற வகையில் அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும்’ என்று சொன்னார்கள். அதன்படி மரியாதை செலுத்தத் தொடங்கியதற்குப் பிறகு  நிறையப் பேர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தவறுதலாக வியாபார வணிக நோக்கத்தோடு யார் செய்தாலும் மிகப்பெரிய அளவில் தண்டிக்கப்படுவார்கள். இது மாதிரி யார் செய்தாலும் தண்டனைக்குரியது. இது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாகக் குற்றவாளிகள் தப்பவே முடியாது” எனப் பேசினார்.

kidney Ma Subramanian namakkal PALLIPALAYAM
இதையும் படியுங்கள்
Subscribe