/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/masu-heat-art.jpg)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையார் மண்டலம் இந்திரா நகர் தொடக்கப் பள்ளியில் கோடைகால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (29.03.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்ந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் தர்ப்பூசணி பழத்தில் ஊசி மூலம் கலப்படம் செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், “தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் ஆகும். இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், குறுகிய காலத்திலேயே அதிகம் இலாபம் பார்க்க நினைப்பவர்கள், உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்வது மன்னிக்க முடியாதது. இவர்கள் இந்த பழத்தில் ஊசியின் வாயிலாக நிறத்தினை மாற்றுவது, இனிப்புச் சுவையை அதிகம் கூட்டுவது என்கின்ற வகையில் ஊசி மூலம் செலுத்துவது என்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அண்மையில் கிருஷ்ணகிரியில் கூட ஒரு கடையில் தர்பூசணி பழம் தொடர்ந்து இனிப்பாக இருக்கிறது என்று சந்தேகம் அடைந்து உணவுப் பாதுகாப்பு துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அந்த பழங்களில் ஊசியின் மூலம் இராசயானம் கலந்திருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கூட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)