தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் நேற்று முன்தினம் (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே கள ஆய்வு நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றும் (22.07.2025) மற்றும் இன்று (23.07.2025) மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டன. அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்த தலைச்சுற்றல் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக அவருடைய உயிராக மதித்த சகோதரர் மு.க. முத்துவின் துக்க நிகழ்ச்சியின் நின்று கொண்டே இருந்தார். அங்குத் துக்கம் விசாரிக்க வருபவர்கள் முதல் மு.க. முத்துவை அடக்கம் செய்யும் வரைக்கும் அங்கேயே இருந்தார்.
காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தார். யாராக இருந்தாலும் இந்த மாதிரியான நிகழ்வுக்குப் பிறகு மறுநாள் காலையில் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த பிறகு தான் அவருக்குச் சிறிய அளவிலான ஒரு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்., நேற்றைக்கும், நேற்று முன்தினமும் பரிசோதனைகளை முடித்துள்ளனர். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார் என்று இன்றைக்கு மருத்துவமனையில் இருந்த அறிக்கை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.