/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/masuni.jpg)
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் வெளியேற முடியாமல் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், கூட்ட நெரிசல் காரணமாகவும், வெப்பம் காரணமாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பலரும் தமிழக அரசு மீது விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த யாரும் இறக்கவில்லை என அரசு கூறவில்லை. விமானப்படையினர் கேட்டதை விட 4,000 படுக்கைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தயாராக இருந்தது. ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மட்டும் 65 மருத்துவர்கள் தயாராக இருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் தலைமையில் 2 முறை ஆலோசனை நடந்தது.15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்கிற வகையில் எதிர்பார்க்கப்பட்டது. 15 லட்சம் பேரும் பங்கேற்றார்கள்.தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்தது. அதே நேரம், வெயிலின் தாக்கமும் மிக கொடூரமாக இருந்தது. இதனால், குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. வெயில் இருக்காது என விமானப்படை கூறவில்லை. தயாராக வாருங்கள் என்று தான் கூறி இருந்தனர்.
இத்தகைய ஆற்றல் மிகுந்த விமான சேவை இந்தியாவில் இருக்கிறது என்பது உலகத்திற்கு உணர்த்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சி. இதில், இந்த இறப்பு உண்மையிலேயே வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இந்த சம்பவம், யாரும் எதிர்பார்க்காத ஒன்று. 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது. இதில் அரசியல் மட்டும் செய்ய வேண்டாம். அப்படி அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். அதே நேரத்தில் இறந்த போன ஐந்து பேருமே வெயிலின் தாக்கம் காரணமாகவே இறந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின்போது போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது என இந்திய விமானப் படையும் கூறியுள்ளது. குடை, தண்ணீர் கண்ணாடி போன்றவற்றை எடுத்து வருமாறு விமானப் படை கூறியிருந்தது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)