Advertisment

பல்கலைக்கழகங்களுக்கு அமைச்சர் கோவி. செழியன் முக்கிய அறிவுறுத்தல்!

Minister Kovi chezhiyan Prosperous Key Instruction for universities

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (07.01.2025) நடைபெற்றது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும் வகையில் சீரிய திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார்.

Advertisment

மாணவ மாணவிகளின் கல்வித் தரம் உயர வேண்டும், மாணவ மாணவிகள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில் உயர்கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தே.

Advertisment

இது போன்ற சம்பவங்கள் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி நிறுவனங்களில் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள், காண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கூர்நோக்கு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். கல்வி நிறுவன வாளகத்திற்குள் உள் நுழைபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் தகவல்கள் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் கண்டிப்பாக மாணவர்கள் பேராசியர்கள், பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அவசர காலங்களில் உதவும் வகையில் தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘காவல் உதவி’ செயலியின் பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவ மாணவிகளின் ஆலோசனையினையும் பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபால், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் எ. சுந்தரவள்ளி, உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் துரை. ரவிச்சந்திரன், மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Meeting instruction universities
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe