
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாவதைத் தொடர்ந்து கடந்த வாரம்முதல் தளர்வுற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழக அரசு விரிவான ஏற்பாடு செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று (29.05.2021) ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு பண்டகசாலை, திருச்சி மாநகராட்சி சார்பில் சரக்கு வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்பனையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, அனைத்துத் துறை அதிகாரிகள், ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.