"முதல்வர் திருச்சியை நேசிப்பவராக இருக்கிறார்" - அமைச்சர் கே.என்.நேரு

minister kn nehru press meet at mahatma gandhi govt hospital 

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 29 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, 47 லட்சம்ரூபாய்மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், திருச்சி மாநகர ஆணையர் வைத்திநாதன், மாநகர மேயர் அன்பழகன், அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் சௌந்திரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "வருகிற 2024ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம்முடிவடைய உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரின் அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் ஒரு குழு அமைத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருடன் மக்கள்தொகைஅதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய உள்ளோம். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விஸ்தரிப்பு பகுதிகள் அதிகரிக்கப்பட்டு திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில வார்டுகளில் 10 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. ஒரு சில வார்டுகளில் 20 ஆயிரம் பேர் உள்ளனர். எனவே நாங்கள் அமைக்கும் குழு அதனை சரி செய்து மறுவரையறை செய்வது தொடர்பாக முடிவு செய்யும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.

திருச்சியில் பறக்கும் பாலம் அமைப்பதில் மெட்ரோ ஆய்வுக்குழு தங்களுடைய ஆய்வுகளை முடித்த பிறகு தான் பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மெட்ரோ ஆய்வுக்குழு தங்களுடைய ஆய்வை முடிக்கும் வரை பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தியதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் தேர்தல் நடக்கும்.

திருச்சியில் புதிய காவிரி பாலபணிகள் தொடங்குவதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுதயார் நிலையில் உள்ளது. இன்னும் கையகப்படுத்தப்படவேண்டிய 2 இடங்களில் ஒன்று மத்திய அரசு அலுவலகம். எனவே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.விரைவில் இதற்கானபணிகள் தொடங்கும். சித்த மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கேட்டுள்ளோம். இந்த முறை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதால், அடுத்த ஆண்டு செய்து தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரே ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாயும்பேருந்து, சாலைஎன 1,700 கோடி ரூபாயும்முதல்வர் வழங்கி உள்ளார்.

சிப்காட்டில் உணவு பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட உள்ளது. திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கொடுத்திருக்கிறார். பத்திரிகைகள் தான் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. முதல்வர் திருச்சியை நேசிப்பவராக இருக்கிறார்" எனத்தெரிவித்தார்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe