
திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியானது கடந்த பத்து வருட காலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதற்காக மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரிஸ்டோ மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பஞ்சப்பூரில் சோதனைச்சாவடியுடன் கூடிய அதி நவீன புறக்காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். மேலும் திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டடத்தினை திறந்து வைத்தும், அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 53வது வார்டு பேர்ட்ஸ் ரோடு ஆனைமலை ஷோ ரூம் அருகில் ரூபாய் 2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டும் பணியினைத் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “திருவாரூர் தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும்” எனத் தெரிவித்தார்.