Skip to main content

"திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை"- அமைச்சர் கடம்பூர் ராஜு!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

minister kadambur raju press meet

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு  மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியது. மேலும் சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் இயங்க அனுமதி தந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஓ.டி.டி.யில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பது எனது கருத்து. வேறு வழியின்றி ஓ.டி.டி.யில் படம் வெளியிடுவதை விட சில காலம் பொறுத்திருப்பது தான் நல்லது". இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“பயங்கரமான ஆளுன்னு சொன்னாங்க... ஆனா எனக்கு மயிலிறகு கொடுத்தாரு” - வீரப்பனை பற்றி பிரபாவதி ஆர்.வி.

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
 Prabbhavathi RV speech in Koose Munisamy Veerappan press meet

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. இதில் நக்கீரன் ஆசிரியர், தயாரிப்பாளர் பிரபாவதி மற்றும் ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.   

அப்போது தயாரிப்பாளர் மற்றும் இந்த சீரிஸை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரபாவதி ஆர்.வி. பேசுகையில், “இந்த மேடை எனக்கும் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸுக்கும் முக்கியமான ஒன்று. இந்த இடத்திற்கு நான் வர எனக்கு உறுதுணையாக இருந்த அப்பா, அம்மா, நண்பர்கள் எங்கள் நக்கீரன் குடும்பம் ஆகியோருக்கு நன்றி. சின்ன வயதிலிருந்து சில விஷயங்கள் நம்மை பாதிக்கும். ஒரு எமோஷனை கிரியேட் பண்ணும். அப்படி ஒரு விஷயம் நடந்தது. 

திடீர்னு ஒருநாள் அப்பா எங்கயோ போறாங்க. வீட்ல அம்மா அழுறாங்க. எல்லாருமே பயத்துடன் இருக்காங்க. ஒரு சாதாரணமான சூழலே இல்லை. முதலமைச்சர் முதல் பெரிய பெரிய ஆட்கள் ஃபோன் பண்றாங்க. என்னம்மா ஆச்சுன்னு அம்மாவிடம் கேட்டபொழுது, அப்பா வீரப்பன்னு ஒருத்தரை பார்க்க போறாருன்னு சொன்னாங்க. யாரு அவருன்னு கேட்டதற்கு, அம்மாவிற்கும் பெரிசாக தெரியவில்லை. ஆனால் ரொம்ப பயங்கரமான ஆளு, யானை, மனுஷங்களையெல்லாம் கொன்னுருக்காருன்னு சொன்னாங்க.

எங்களுக்கு அப்பாவ விட்டா ஒன்னும் கிடையாது. அவருக்கு நக்கீரன் பத்திரிகை, அவருடைய தம்பிகள், அவங்களுடைய குடும்பம் இது அனைத்திற்குமே அப்பாதான் அஸ்திவாரம். இப்படி இருக்கையில், ஏன் அப்பா போறாருன்னு யோசிப்பேன். திடீர்னு வருவாரு. காலில் எல்லாம் அட்டை பூச்சி கடிச்ச தடம் இருக்கும். வலியும் இருக்கும். அதை பார்க்கும் பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும். ஒரு நாள் மயிலிறகை நீட்டி இது வீரப்பன் கொடுத்தாருன்னு கொடுத்தார். என்னடா... பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க... ஆனா நமக்கு பிடிச்ச மயிலிறகை கொடுத்திருக்கிறாரே... இவர் எப்படிப்பட்ட ஆளு என சின்ன வயதிலிருந்தே எண்ணம் இருக்கும்.   

பின்பு நான் காலேஜ் போறேன். நக்கீரன் 25வது ஆண்டு வருது. அதன் வரலாறை டாக்குமெண்ட்ரி பண்ண முடிவெடுத்தேன். அதற்காக காட்டுக்குள் போறேன். அந்த மக்களை சந்தித்து பேசும்பொழுது, இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்களே என அவர்கள் வலியை நினைத்து 3 நாள் தூக்கமே வரவில்லை. அதனால் சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட பாதிப்புகள், மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இதை ஒரு பெரிய ஆவணப் படைப்பாக மக்களிடம் சேர்க்க வேண்டுமென தோனுச்சு. அப்பாவிடம் கேட்டேன். பெரிய பெரிய ஆட்கள் இதை ஆவணப்படுத்த கேட்டபொழுது கூட அப்பா தரவில்லை. சரி நம்ம அப்பாதான, கேட்டவுடனே கொடுத்துருவாங்கன்னு நினைத்தேன். ஆனால் மற்றவர்களை விட எனக்கு நிறைய டெஸ்ட் வச்சாங்க. எக்ஸாம் வைக்காததுதான் பாக்கி.     

ஏனென்றால், நக்கீரன் எப்பொழுதும் எளிய மக்களுடைய குரலாக இருந்திருக்கிறது. அப்பா காட்டிற்கு போனது கூட அந்த மலைவாழ் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைக்குமா என்பதற்காகத்தான். ஒரு ஆவணம், எல்லாத்தையும் சரியாகவும் நேர்மையாகவும் கொண்டு போய் சேர்க்கணும் என்ற நம்பிக்கையை கொடுத்த பிறகுதான் முழு நம்பிக்கையோடு அப்பா கொடுத்தார். அந்த நம்பிக்கைக்காக அப்பாவிற்கு பெரிய நன்றி. அதன் பிறகுதான் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் ஆரம்பித்தேன். பின்பு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் போனேன். எல்லா சந்தேகத்தையும் தீர்த்தார். ரொம்ப சப்போர்ட் பண்ணார். ஜீ குழுமம் இப்போது வரைக்கும் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. 

என்னுடைய கனவை அவங்களுடைய கனவாக நினைத்து உறுதுணையாக நடந்துக்கிட்டது ஜெய் மற்றும் வசந்த் அண்ணா. அவங்க இல்லன்னா இந்த ப்ராஜெக்ட் இந்த இடத்தில் இப்படி இல்லை. அவங்க எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். அப்புறம் இயக்குநர் ஷரத், ஒளிப்பதிவாளர் ராஜ், படத்தொகுப்பாளர் ராம், இசையமைப்பாளர் சதீஷ் என எல்லாருமே அவரவர்களின் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். என்.ராம் சாரில் தொடங்கி, சீமான், ரோகிணி என அனைவருக்குமே பெரிய நன்றி. படக்குழுவிற்கும் நக்கீரன் டீமிற்கும் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணா எல்லாருக்குமே பெரிய நன்றிகள்” என்றார்.