Skip to main content

புதிய ஆக்சிஜன் நிலையங்களை திறந்து வைத்த அமைச்சர் கா.ராமசந்திரன்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Minister K. Ramachandran opens new oxygen stations

 

கோவை  இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல் அண்ட் டி நிறுவனம் சாா்பில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் 1,000 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும், கூகுள் நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 400 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன்  திறந்துவைத்தார். பின்னர் அவா், செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அரசின் போா்க்கால நடவடிக்கையின் மூலம்  கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் 2ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,000க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 310 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். 

 

இ.எஸ்.ஐ. மருத்துவமனை 1,082 படுக்கைகளுடன் பிரத்யேக  கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மொத்தம் 1,082 படுக்கைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகள், 783 ஆக்சிஜன் படுக்கைகள், 199 சாதாரண படுக்கைகள் உள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஒரே நேரத்தில் 280 பேருக்கு அளிக்க முடியும். தற்போது, 1,400 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த முடியும் என்றாா். தொடர்ந்து அவர், நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை காட்டில் விடுவிக்க அரசும், வனத் துறையும் தயாராக உள்ளது. ஆனால், வன விலங்கு என்பதால் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் உணவு சாப்பிடவே சிரமப்பட்டு வருகிறது. 

 

யானைக்கு சிகிச்சை அளித்து கும்கி யானைகளுடன் பழகவிட்டு யானைகள் முகாமில் உணவு வழங்கப்படுகிறது. ஊருக்குள் வந்து பழக்கப்பட்டதால் காட்டில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை கும்கி யானையாக பழக்கப்படுத்தி முகாமில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றாா். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஆா்.ரவீந்திரன், எல் அண்ட் டி நிறுவன திட்ட மேலாளா் ராஜா சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.