திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989ம் ஆண்டு முதல் இன்று வரை 34 வருடங்களாக தொகுதி மக்களின் நம்பிக்கை பெற்றவராக வலம் வருபவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அந்த தொகுதி மக்களின் இல்லங்களில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில், அமைச்சர் ஐ.பெரியசாமி தவறாமல் கலந்துகொள்வார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் உள்ள 13வது வார்டைச் சேர்ந்த தி.மு.க தொண்டரான கூல் பாஸ்கரன் இல்ல நிகழ்வுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வந்தார். அப்போது வார்டு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, “ஆத்தூர் தொகுதியில் மட்டும்தான் அதிக அளவில் வாழையடி வாழையாய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முதல் நான்கு தலை முறை வரை தி.மு.கவில் இருந்து வருகின்றனர். இது என் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதோடு அவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி வருகிறது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தேர்தல் நேரத்தில் என்னுடன் நின்றவர்கள் ஆத்தூர் தொகுதி மக்கள்.
அதை நான் என்றும் மறக்கமாட்டேன். இதுதவிர நான் சென்னை மற்றும் வெளியூர் சென்றிருந்தாலோ தவறாமல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதை கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கழகத்தலைவர் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலினின் வழியை பின்பற்றி கட்சித் தொண்டர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்.