Minister I. Periyasamy says Steps will be taken to control elephants

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி கிராமங்களான தருமத்துப்பட்டி, கன்னிவாடி, தெத்துப்பட்டி, டி.பண்ணைப்பட்டி, நாயோடை நீர்த்தேக்க பகுதி, நீலமலைக்கோட்டை, கோம்பை, அமைதிச்சோலை மற்றும் மலைகிராமங்களான ஆடலூர், பன்றிமலை கிராமப் பகுதிகளில் அடிக்கடி யானைகள் வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதுதவிர வருடத்திற்கு ஒருமுறை இப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கி பயிர்களையும், தென்னமரக் கன்றுகளையும் நாசம் செய்துவருகின்றன.

Advertisment

நீலமலைக்கோட்டை பகுதியில் தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள் தென்னங்கன்றுகளை நாசம் செய்ததோடு, அருகில் உள்ள தோட்டத்தில் மக்காச்சோள பயிர்களையும் நாசம் செய்தன. அப்பகுதி விவசாயிகள் ஜெயராம், சண்முகவேல், முருகானந்தம், குழந்தைவேல் ஆகியோர் அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து யானைகளை கட்டுப்படுத்த கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக மாலை ஐந்து மணியளவில் அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment

அப்போது அவர் பேசும்போது, “தொடர்ந்து வனத்துறை மூலம் விவசாயிகளின் நலன் காக்க அறிவுறுத்தி வருகிறேன். இருந்தும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன. இம்முறை கூட்டமாக வந்துள்ள யானைக்கூட்டம் அதிக அளவில் சேதப்படுத்தி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல கும்கி யானைகளை வரவழைத்து யானைக்கூட்டங்களை விரட்டி அடிக்கப்படும்” என்றார்.

Minister I. Periyasamy says Steps will be taken to control elephants

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்குத் தொடர்ச்சி அடிவார பகுதி விவசாயிகளின் நலன்கள் காக்கப்படும். இந்த சட்டமன்ற தொடரிலே இதுகுறித்து நான் பேச உள்ளேன். தொடர்ந்து வனத்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து இங்குள்ள நிலைமைகளையும் எடுத்து சொல்வேன்” என்றார்.

Advertisment

உடனடியாக அமைச்சர் மாவட்ட வன அதிகாரிகளை தொடர்பு கொண்டதின் பேரில் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டு யானைக் கூட்டத்தை விரட்டி அடிக்க முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் காஞ்சனா மற்றும் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், கும்கியானை சின்னத்தம்பி உதவியுடன் யானைக் கூட்டத்தை விரட்டி அடித்து வருகின்றனர்.

Minister I. Periyasamy says Steps will be taken to control elephants

நிகழ்ச்சியின்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, ஒன்றிய செயலாளர் மணி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் சகிலாராஜா, துணைத்தலைவர் முருகேசன், அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நீல மலைக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராதா தேவி சாமிநாதன் புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி என்ற லெட்சுமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.புதுக்கோட்டை ரமேஷ், நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.