
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கியதில் 500 கோடி ரூபாய்வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
சேலம் மாவட்டக் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29.07.2021) நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார்.
விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர், பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இதையடுத்து அமைச்சர் ஐ. பெரியசாமி ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழக கூட்டுறவுத்துறையில் நடப்பு ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்குப் பயிர்க்கடனை உரிய நேரத்தில் வழங்குவதோடு, உரம் வழங்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம்.
ரேஷன் கடைகளில் 3,997 விற்பனையாளர், எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இப்பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த பல்வேறு புகார்களின்பேரில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. பயிர்க்கடன் வழங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தரிசு நிலத்தில் வாழை, தென்னை, மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருப்பதாகவும், எதுவும் பயிரிடப்படாத தரிசு நிலத்திற்கும் பயிர்க்கடன் வழங்கியதாக முறைகேடுகள் நடந்துள்ளன.
கடன் வழங்கும் நிபந்தனைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதில், எத்தனை பேருக்கு, எத்தனை கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்துவருகிறோம். மேலும், 5 பவுன்வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதையும் ஆய்வுக்குட்படுத்தியதில், முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ பணம் இல்லை. ஆனால் நகைக்கடன் கொடுக்கப்பட்டதாக கணக்கு இருக்கிறது. அதாவது நகையை அடகு வைத்து, வைப்பு நிதியாக கணக்கில் கொண்டுவந்துள்ளனர். 11 சதவீத வட்டிக்கு நகையை அடகு வைத்து, 7 சதவீத வட்டி பெறும் வகையில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் அதிகளவில் மாற்றப்பட்டதாக வந்த புகார் குறித்து ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறை விசாரணையில் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 18 வயது நிரம்பிய மாணவர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்." இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.