Minister govi. Chezhiaan will take action Anna University student  issue

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(24.12.2024) அங்கு பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் இருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் வளாகத்தில் பணியாற்றிய கட்டுமான தொழிலாளர்கள், காவலர் என பலரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேசமயம் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் உரிய விசாரணை நடந்து வருவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர் குறித்த தகவலை தற்போதுவரை போலீசார் வெளியிடவில்லை. மேலும் அவரிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழகத்தின் முன்பு ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திவந்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவர்களிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், “கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என்று தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் விளக்கமளித்துள்ளார்.