
கடலூர் வட்டத்தில் ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று ரெட்டிச்சாவடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் சரண்யா, சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி. செழியன், “கடலூர் தொகுதியில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் முகாம் துவங்கி உள்ளது. பொதுமக்கள் அரசு அதிகாரிகளை தேடிச் செல்லும் நிலை மாறி தற்போது அதிகாரிகள் மக்களைத் தேடி சென்று மனுக்களை பெறுகின்றனர். இந்த முகாமில் 15 துறைகளை சேர்ந்த 55 வகையான பணிகள் தொடர்பாக கோரிக்கைகளைப் பெற்று விரைவில் தீர்வு காணுகிறோம்.மேலும் இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் அறிவிப்பை அறிவித்துள்ளார். இதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நன்றி.
யுஜிசி வரைவு கொள்கையை பொறுத்த வரை கடந்த மாதம் இறுதி வரை அவகாசம் கேட்டு கருத்துக்களை கூறலாம் என சொல்லி இருந்தனர். பாஜக ஆளும் மாநிலத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலத்திலும் உயர்கல்விக்கு இடையூறாக உள்ளதாக கூறி அதை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுஜிசி கொள்கையை மக்கள் மன்றத்தில் எதிர்க்கிறோம், சட்டமன்றத்தில் எதிர்க்கிறோம், நீதிமன்றத்தில் எதிர்க்கிறோம். மேலும் சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் நடத்தி உயர் கல்வியை பாதுகாப்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது” என்றார்.
மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி வரவு ஆதாரங்கள் என்ன, என்பது அனைவருக்கும் தெரியும். அரசு கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் வந்த போது பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. அதனை படிப்படியாக நிர்வகித்துச் சரி செய்து வருகிறோம், அதன்படி ஓய்வு பெற்றவர்களின் பண பலன்கள் தொடர்பான கோரிக்கைக்கும் விரைவில் பலன் காணப்படும்” என்றார்.