
நெய்வேலி அருகே தொப்புளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஜனனி. வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வரும் இவருக்கு அமைச்சர் செல்போன் வழங்கு கல்வி உதவித் தொகை கிடக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 21 - 22 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது இவர் நெய்வேலியில் தங்கி வேப்பூரில் நடைபெறும் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ விழாவிற்கு செல்லும் போது சாலையின் இரு புறத்திலும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று ஆரவாரம் செய்து முதல்வரை வரவேற்றனர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் முதல்வரின் படத்தை ஓவியமாக வரைந்தும், பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். இதனை முதல்வர் நடந்தே சென்று அனைவரிடத்திலும் பெற்றுக்கொண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் சிறியவர்களிடம் சுயபடம் எடுத்துக் கொண்டார்.

அப்போது மாணவி ஜனனி கடிதம் ஒன்று அளித்தார். அதில் ‘முதல்வர் அப்பா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..’ எனக் கவிதையுடன் கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் அதில், “என்னிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால், தங்களுடன் என்னால் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியவில்லை” என வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனைச் சென்னைக்குச் சென்ற பிறகு முதல்வர் படித்துள்ளார். கவிதையை படித்து விட்டு மகிழ்ச்சி அடைந்த அவர், மாணவி ஜனனியிடம் பேசியுள்ளார் . அப்போது அவரது தாய் உஷா ராணியும் முதல்வரிடம் பேசியுள்ளார். ‘பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள்..’ என அவரது தாய் முதல்வரிடம் கேட்டுள்ளார். அதற்கு முதல்வர், “படிப்பை பற்றி கவலைப்படாதீர்கள். நல்ல பிள்ளைகளை படிக்க வைங்க. மீதியெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாணவியின் குடும்பத்தினரை குறிஞ்சிப்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது மாணவியிடம் நலம் விசாரித்து புதிய செல்போன் ஒன்றை வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட மாணவி பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாணவியின் தாயிடம், “கல்வி உதவிக்காக கஷ்டப்பட வேண்டாம். நல்ல படிக்கட்டும், மீதியெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், ‘கல்லூரி கட்டணம் கட்டியாச்சா? என்று கேட்டுள்ளார் அப்போது மாணவியின் தாயார் இந்த வருடம் கட்டியாச்சு அடுத்த வருடத்திற்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார். அதற்கு, “எப்போது கட்ட வேண்டும் என்று கூறுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேறு எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்” என தொலைப்பேசி எண்ணையும் வழங்கி உள்ளார். இந்நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவி, “நான் கொடுத்த கடிதத்திற்கு முதல்வர் என்னிடம் பேசுவார் என எதிர்பார்க்கவே இல்லை. அது மட்டுமல்ல நான் வைத்த கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றியுள்ளனர். இது எனக்கும் எங்க குடும்பத்திற்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்றென்றும் அவர்தான் முதல்வர் அப்பா இந்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்” என்று கூறினார்.