Skip to main content

மோசமான சாலை! கட்சி மூத்தத் தொண்டரைச் சந்திக்க ஆட்டோவில் சென்ற அமைச்சர்! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Minister Genji Masthan travel on auto

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான மஸ்தான் ஆட்டோவில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடி கட்சித்தொண்டர் வெங்கடேசன்(70). இவருக்கு பக்க வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து, தற்போது அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவல் கட்சியினர் மூலம் அமைச்சர் மஸ்தான் கவனத்திற்கு சென்றது. 

 

இதையடுத்து நேற்று காலை வெங்கடேசனை பார்த்து உடல் நலம் பற்றி விசாரிப்பதற்காக செஞ்சியில் இருந்து புறப்பட்டார் அமைச்சர் மஸ்தான். அவர், செல்லும் வழியில் சாலை சரி இல்லாமலும் கரடுமுரடாகவும் இருந்துள்ளது. அந்த வழியில் கார் செல்ல முடியாத நிலை, இதை பார்த்த அமைச்சர் ஒரு ஆட்டோவை வரவழைத்து அந்த ஆட்டோவில் பயணம் செய்து மூத்த கட்சிக்காரர் வெங்கடேசனை சந்தித்து அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அவரது சிகிச்சை உதவிக்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் அமைச்சர் வழங்கினார். 


அமைச்சருடன் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அனந்தபுரம் நகரச் செயலாளர் சம்பத் ஆகியோரும் சென்றனர். காரில் செல்ல முடியாத அளவிற்கு அப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருப்பதை அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்தத் தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் கேள்விப்பட்ட அமைச்சர் மஸ்தான், அவரை தேடி சென்று பார்த்து நலம் விசாரித்து சிகிச்சைக்கு பணம் உதவி செய்துள்ள சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்