Minister explanation about What is the next step on Doctor incident

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்தது. அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

Advertisment

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவரை பொறுத்தவரையில் நலமுடன் இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்னர் வீடியோ காலில் உரையாற்றினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன் மருத்துவரைச் சந்திக்க உள்ளேன். மருத்துவர் மிக மிக நலமுடன் இருக்கிறார் என்பது சிறிய அளவிலான நிம்மதியைக் கொடுக்கிறது. இவர் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மருத்துவ சேவைகளைத் தந்தவர். விக்னேஷ்வரனின் தாயார் காஞ்சனா என்பவர் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். அட்வான்ஸ் ஸ்டேஜ் என்ற வகையில் முற்றிய அளவிலான புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த மருத்துவமனையில் ஆறு, ஏழு முறை சீமோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. விக்னேஷ்வரன் தனது தாய்க்கு, மருத்துவர் சரி இது சரியான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரிடம் பேசிய போது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசும், அரசு மருத்துவர்களும் மிகச் சிறந்த வகையில் சேவை மனப்பான்மையுடன் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டுள்ளார். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றினார்கள். மருத்துவர்களின் மருத்துவத்தில் குறைபாடு எனப் போலியான காரணத்தைச் சொல்லித் தாக்குதல் நடத்துதல் என்பது மிக மிகக் கண்டிக்கத்தக்கது.

எந்த மருத்துவர்களும் மருத்துவ சேவையில் நிச்சயம் தவறிழைக்க மாட்டார்கள். அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை மிகச் சிறந்த வகையில் தாங்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் வாயிலாகக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் உடனடியாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை முடித்து மருத்துவ சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்று உள்ளனர்.

Advertisment

Minister explanation about What is the next step on Doctor incident 

அனைத்து மருத்துவ சங்கங்ளும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளன. மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். எனவே மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக் காவல் நிலையம் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனையிலும் சிசிடி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன வட்டார துணை மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.