தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கும் மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதாவது மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள 3.16 சதவீதத்திற்கு மிகாமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
அதே சமயம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசே ஏற்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வு இல்லை. மேலும், வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அந்த கட்டணத்தையும் அரசே ஏற்கும். எனவே அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இல்லை. அதோடு, தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்தத் தொழிற்சாலைகளுக்கும் மின் கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.