Minister EV Velu request police thiruvannamalai deepam 2022

Advertisment

2022 ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 15 ஆம் தேதிதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் பிரதிநிதிகள், அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் எ.வ.வேலு, "மகாதீபத்தன்று கோவிலுக்குள் அளவுக்கு அதிகமாக போலீசார் இருப்பதாக எனக்கு கடந்த காலங்களிலேயே புகார்கள் வந்துள்ளன. காவலர்களும் மனிதர்கள்தான்.அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலர்கள் பொதுமக்களுக்கும், முக்கிய விருந்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை மறந்து, காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர்களையும், அவர்களது உறவினர்களையும்கும்பல் கும்பலாக கோவிலுக்குள் அழைத்து வந்து தரிசனம் செய்கின்றனர். அவர்களை யாரும் வரவேண்டாம் எனச் சொல்லவில்லை. அனுமதி பாஸ் வாங்கிக்கொண்டு உள்ளே வரட்டும். முக்கியப் பிரமுகர்களே அனுமதி பாஸ் இல்லாமல் இங்கேஅங்கே எனத்திண்டாடுகிறார்கள். அப்படியிருக்க காவலர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவிலுக்குள் சர்வசாதாரணமாக வருவது பொதுமக்களை, பக்தர்களைக் கோபப்படுத்துகிறது.

இந்தாண்டு கோவிலுக்குள் அப்படி வருவதை தடுக்க வேண்டும். அறநிலையத்துறைக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையால் செய்யப்படும் வேலைகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கிறேன். இன்னும் 3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை திருப்பதி போல் மாற்றிக் காட்டுகிறோம் என முடிவு செய்து பணியாற்றுகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.அவர்களுக்கான உதவிகள் அனைத்தும் எங்கள் துறையால் செய்யப்படும்" என்றார்.

Advertisment

வரும் நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.