Minister AV Velu inspected thiruvannamalai

Advertisment

பக்தி நகரமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றியும், கிரிவலப் பாதையிலும் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் அதிகமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கட்டடங்களாகிவிட்டன. இப்போது வெகு சில குளங்களே உள்ளன. இதனைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள சில குளங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முடிவில் தெப்பல் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அய்யங்குளமும் ஒன்று. இந்த குளத்தின் கரைகள், 32 படிக்கட்டுகளில் 10க்கும் மேற்பட்ட படிகள் உடைந்து, சிதிலமடைந்து பல ஆண்டுகளாக இருந்துவந்தன. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுத்தூர்வாரும் பணியைச் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும் 32 அடி ஆழமும் கொண்ட குளத்தினை தூர்வாரி, சீரமைத்து, புனரமைக்கும் பணியினை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் வேலு நடத்தும் தூய்மை அருணை இயக்கத்தின் சார்பில் செய்கின்றனர்.

Advertisment

அந்த பணியினை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். அப்போது அந்த குளம், நகரத்தினை வாரந்தோறும் தூய்மை பணியில் ஈடுபடும் ஐந்நூற்றுக்கும் அதிகமான தூய்மை அருணை இயக்கத்தினர் வருகை தந்திருந்தனர். குளத்தின் மையத்தில் 4 கால் மண்டபம் உள்ளது. சிதிலமடைந்த அந்த மண்டபத்தினை சீர் செய்து அதில் நந்தி சிலை அமைத்து தரவேண்டும் என பக்தர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று அங்கே நந்தி சிலை வைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் வேலு.

படம் – எம்.ஆர். விவேகானந்தன்