Advertisment

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழகநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டுமதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும்நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில்(Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்தவழக்குகள்உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Andhra dam river duraimurgan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe