bnm

Advertisment

கடந்த 13- ஆம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கடந்த 14- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிர் காக்கும் எக்மோ கருவி சிகிச்சையிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.