/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3351.jpg)
கடலூர் திருப்பாதிரிபுலியூர்,கம்மியம்பேட்டை, புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நேற்று சமத்துவ நாள் நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் 4,377 பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, ''இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று சமத்துவ நாள் விழாவாக தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக இருந்த டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர். அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு ,தமிழ்நாடு முழுவதும் இன்று இவ்விழா கொண்டாடப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 2023-24ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகர மற்றும் ஊரக பகுதிகளிலுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்காக வாழ்வாதார திட்டங்களான விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், கால்நடை மேம்பாடு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்கள் செய்து மேம்பாடு அடையும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொல்குடி வேளாண்மை மேலாண்மை திட்டம் – ஐந்திணை எனும் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் இவ்விழாவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரகவளர்ச்சித் துறை உள்ளிட்ட 15 துறைகளிலிருந்து 4377 பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதி மொழியை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)