
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள் அவ்வப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே சென்று வருகிறார்கள். அதைக் கண்டு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே தனது திண்டுக்கல் தொகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு கிருமி நாசினி, முககவசம், கையுறை, சோப்பு போன்ற கரோனா தடுப்பு உப கரணங்களுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டு பொதுமக்களுக்கும் மற்றும் ஒன்றிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் தனது சொந்த செலவில் ஐந்து கிலோ அரிசியுடன் மளிகை பொருட்களையும் வழங்க முடிவு செய்தார். அதனடிப்படையில் அந்தந்தப் பகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களின் ரேஷன் கார்டுகள் அடிப்படையில் கணக்கெடுக்க சொல்லி டோக்கன் கொடுக்க சொன்னார்.
அதன்பேரில் திண்டுக்கல் 15-வார்டில் உள்ள குமரன் தெரு மற்றும் பாலகிருஷ்ணாபுரம், அபிராமி குப்பம் உள்பட மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களுக்கும் கட்சி பாகுபாடு பார்க்காமல் 5 கிலோ அரிசியுடன் மளிகைப் பொருட்களையும் வழங்கி வருகிறார். அதுபோல் ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களான கரோனா நிவாரண உதவிகளை அந்தந்தப் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் முன்னிலையில் வழங்கி வருகிறார். இப்படி திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் வசிக்க கூடிய ஒரு லட்சம் பொது மக்களுக்கு ரேஷன் கார்டுகள் அடிப்படையில் கரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கி வருகிறார்