Advertisment

“வேலையில்லை என்பதை போக்கவே வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுகிறது” - அமைச்சர் சி.வி.கணேசன்

Minister CV Ganesan issued the appointment orders to the students in Pollachi

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஈச்சனாரியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட மாணவ- மாணவியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். அப்போது, மேடையில் விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்களிடமும் பணி நியமன ஆணையை அமைச்சர் சி.வி.கணேசன் கொடுத்து, மாணவர்களிடம் வழங்க வைத்தார்.

இதையடுத்து, மாணவ- மாணவியர்களிடையே உரையாற்றிய அமைச்சர் சி.வி.கணேசன், ''முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 238 வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். பல்வேறு தொழில் முதலீடுகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்குத் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை மொத்தமாக உருவாக்கி இருக்கிறோம். விரைந்து அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 75 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார்...''என்று கூறினார்.

Advertisment

தொடர்ந்து, பேசியவர், ''முதன் முதலில் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் உதயநிதி தொகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. அப்பொழுது எனக்கு வேலை வாய்ப்பு முகாம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அவருடன் சென்றுதான் வேலை வாய்ப்பு முகாம்கள் குறித்துத் தெரிந்து கொண்டேன். தொழிலாளர் நலத்துறை ஒற்றுமையுடன் செயல்படுவதால், கூட்டு முயற்சியுடன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாருக்காவது வேலை வேண்டும் என்று எம்.பி பரிந்துரை சொன்னால், நான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்கு கடிதம் கொடுப்பேன். ஆனால், அவர்களை அந்த நிறுவனத்தின் கேட்டிலேயே விட மாட்டார்கள். போய் சேரவே முடியாது. கடிதம் வாங்கியவர்கள் படாத பாடுபட்டு விடுவார்கள். வேலை கொடுக்கிறார்களா? இல்லையா? என்பது இரண்டாவது பட்சம். இவ்வாறு வேலைக்குச் செல்பவர்கள் சம்பளம் பத்தவில்லை, வேறு வேலைக்குப் போகலாமா என்று யோசிப்பார்கள். இதையெல்லாம் நீக்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் உருவாக்கிப் பயன்பெறச் செய்து இருக்கிறோம்..''என்று அமைச்சர் நகைச்சுவையாகக் கூறினார்.

நிறைவாக பேசிய அமைச்சர், ''வேலை இல்லை என்பதைப் போக்கும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து முதலீடு ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் திறக்க வைத்தவர் முதல்வர். கடுமையாக யார் முயல்கின்றார்களோ? அவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்..''என்று அமைச்சர் சி.வி.கணேசன் மாணவர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக பேசினார். ஆனால், நிகழ்ச்சிக்குப் பின்னர், சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறித்துக் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்காமலேயே சென்றார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியும் தனியார் வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை வெகுவாக பாராட்டி பேசினார். தமிழக அரசின் ஏற்பாட்டின் படி நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் பல மாணவர்களின் வேலைவாய்ப்பு கனவு நிறைவேறியது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe