Skip to main content

“எனது மனைவி உயிரோடு இருக்கும்போது...” -  கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Minister CV Ganesan burst into tears on the platform thinking of his wife

கடலூர் மாவட்டம் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் சி.வி. கணேசன், அவரது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2000 விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி சிறப்பித்தார். இதற்கான நிகழ்ச்சி கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன பெருந்துட்ட வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் உதவியுடன் இந்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. நிர்வாக பொறுப்பு அதிகாரி பாலச்சந்தர் நிர்வாக தலைவர் பிரசன்ன குமார், வெங்கடேஸ்வரா கல்விக் குழும தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் அவர்கள் தொகுதியில் உள்ள 2000 விதவை தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார். 

தையல் இயந்திரம் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், “மனைவி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு வருவதை உணர்கிறேன். அதேபோல் தொகுதியில் கணவரை இழந்து வாடும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதையும் உணர்ந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் 2000 விதவை தாய்மார்களுக்கு தையல் இயந்திரத்தை வழங்கி உள்ளேன். திட்டக்குடி தொகுதியில் சுமார் 8000 விதவை தாய்மார்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.

எனவே அப்படிப்பட்ட அனைவருக்கும் எனது சொத்தை விற்றாவது தையல் இயந்திரம் வழங்க உள்ளேன். காரணம் எனது மனைவி உயிரோடு இருக்கும்போது மனதில் கஷ்டங்கள் சங்கடங்கள் இருந்தாலும் அதை போக்கும் வகையில் அதிக நேரம் அவர் இந்த தையல் இயந்திரத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார். அதோடு அவர் என்னிடம், உங்களை நம்பி உள்ள திட்டக்குடி தொகுதி மக்களை கைவிட்டு விடக்கூடாது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுவார். அப்படிப்பட்ட மனைவி இல்லாமல் நான் கஷ்டப்படுவதை உணர்கிறேன். அதேபோல் கணவரை இழந்து கஷ்டப்படும் தாய்மார்களின் கஷ்டத்தைப் போக்க பெரும் உதவியாக இருக்கும்  என்று அனைவருக்கும் தையல் இயந்திரம் வழங்குகிறேன்” என்று கூறியபடியே கண்ணீர் விட்டு அழுதார் அமைச்சர்.

அதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த பெண் பயனாளிகள் அனைவரும் கண் கலங்கினர். அதோடு அனைவரும், ‘நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கண்கலங்கி கஷ்டப்படக் கூடாது..’ என்று ஆறுதல் கூறினார்கள். நெகிழ்ச்சி பொங்க நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் ஒன்றிய செயலாளர், மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  

சார்ந்த செய்திகள்