Skip to main content

வைரலாகும் அமைச்சர் சக்கரபாணியின் வீடியோ! 

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Minister Chakrapani's video Viral

 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாட்டு வண்டியை ஓட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான சக்கரபாணி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயத்திலும் ஈடுபாடாக இருந்து வருகிறார். தனது சொந்த ஊரான கள்ளிமந்தையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காளியப்பா கவுண்டனூரில் அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

 

இந்தத் தோட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணி எப்போதாவது வந்து செல்வது வழக்கம். அப்படி வரும்போது தோட்டத்தில் உள்ள விவசாய நிலங்களையும் பார்வையிட்டுவிட்டு அங்குள்ள மாடு கன்றுகளோடு சிறிது நேரம் நேரத்தை கழித்துவிட்டு செல்வார். அதுபோல் நேற்று, அமைச்சர் சக்கரபாணி தோட்டத்துக்குச் சென்றார்.

 

 Minister Chakrapani's video Viral

 

அப்போது, தோட்டத்திலிருந்த மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளை பூட்டி தோட்டத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கப்பல்பட்டி பிரிவு வரை மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றார். இதனை அமைச்சர் சக்கரபாணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாணவர்களுக்காக முதல்வர் கொண்டு வந்த திட்டம்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

"The plan brought by the Chief Minister for the students" - Minister Chakrapani

 

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று துவங்கப்பட்டது. கலைஞர்  படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார். 

 

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

 

அதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முதலமைச்சர் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது. நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், சிலருடைய குடும்ப சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவினை முறையாக சாப்பிடுவதில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

 

"The plan brought by the Chief Minister for the students" - Minister Chakrapani

 

மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

 

ஏற்கனவே தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தற்போது, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை இன்று திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 5,327 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.

 

முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், கலைஞர் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல் படுத்தினார். நமது தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்” என்றார்.  

 

 

 

Next Story

“இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை” - அமைச்சர் சக்கரபாணி  

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

cm stalin who brought the breakfast program for students

 

ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த விழாவுக்கு நகர் மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்

 

இதில் அமைச்சர் சக்கர பாணி பேசும்போது. “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து விலையில்லா மிதிவண்டிகள், நோட்டு புத்தகம், கட்டணமில்லாப் பேருந்து, காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 13 லட்சம் மக்களுக்கு வேலை  வாய்ப்பினை வழங்கியுள்ளார். 

 

அதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில், தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 25ல் முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறவில்லை ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரப்படுகிறது. மாவட்ட ஊராட்சித்துறை தலைவர் நிதியிலிருந்து கே. ஆர். அரசுப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலா 7 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

 

இதில் பழநி ஆர்டிஓ சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.