Skip to main content

திமுக விளம்பரத்தில் சீனக் கொடி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Minister Anitha Radhakrishnan on Chinese flag in DMK advertisement

இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று(28.2.2024) இரண்டாவது நாளாகத் தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 

“திமுகவின் தொடர் வலியுறுத்தல்கள் மூலமாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது” என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதனிடையே நாளிதழ் ஒன்றில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் இந்தியா ஏவுகணை முகப்பில் சீனாவின் தேசியக் கொடி இடம்பெற்றிருந்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசிய மோடி, “குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திறப்பு விழாவில் திமுக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில் சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதிலிருந்தே இவர்களின் நாட்டுப் பற்று நன்றாகத் தெரிகிறது” என்றார். 

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இந்த விளம்பரத்தை செய்த நபர் எங்கிருந்து இந்தப் படத்தைக் கண்டுபிடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. சீனாவை இந்தியா எதிரி நாடாக அறிவிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். சீன பிரதமரை நம் பிரதமர் இந்தியா அழைத்ததையும், அவர்கள் மகாபலிபுரம் சென்றதையும் பார்த்திருக்கிறேன். உண்மையை ஏற்க விரும்பாத காரணத்தால் பிரச்சினையை திசைதிருப்ப காரணங்களைத் தேடுகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா கிருஷ்ணன், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குலேசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கு முதன்முதலாக குரல் கொடுத்தவர் கலைஞர். அவரைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் அதே கோரிக்கையை வைத்தார். இதையடுத்து கனிமொழி எம்.பி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏவுதளம் அமைக்க குரல் கொடுத்ததோடு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியும் அணுகியும் வலியுறுத்தி வந்தார். இப்படியாகத் தொடர்ந்து இதற்காக குரல் கொடுத்து வந்தவர்களின் பங்களிப்பு மறைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் விளம்பரம் செய்ய முடிவெடுத்தோம். அதில் இந்த விளம்பரத்தை தயார் செய்த நபர் இதுபோன்ற தவறுகளை செய்துவிட்டார்; நாங்களும் அதனை கவனிக்கவில்லை. மற்றபடி எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எங்கள் மனதிலும் இந்தியா குறித்த பற்றுதான் இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் சாதி, மத மோதல்கள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்; சிறு தவறின் காரணமாக இது நடைபெற்றுள்ளது” என்றார். 

சார்ந்த செய்திகள்