Skip to main content

முதியோர்களின் கைகளை பிடித்து எழுத கற்றுக்கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! 

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Minister Anbil Mahesh who taught the elders to hold hands and write ..!

 

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் பகுதியில் எழுத்தறிவு இல்லாதவர்கள், கையெழுத்து போடத் தெரியாதவர்கள் என மொத்தம் 5,599 நபர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 913, பெண்கள் 3,576 நபர்கள். இவர்களுக்கு எழுதவும் கையெழுத்திடவும் கற்றுக்கொடுக்க ‘புரட்சியின் எழுத்தறிவு இயக்கம்’ எனும் இயக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் கையெழுத்திடவும் பின்னர் படிப்பதற்கும் 89 நாட்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (20.07.2021) கே.கள்ளிக்குடி பகுதியில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். 

 

இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதியவர்களோடு அமர்ந்து “நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; கற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆர்வமுடன் பலகையில் எழுதி காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையைத் திறந்துவைத்தார். பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்தார். அப்போது அமைச்சரின் முன்பு இரு மாணவிகள் சிலம்பம் சுற்றி காண்பித்தனர். சிறுமிகளின் திறமையைப் பாராட்டினார்.

 

அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வுசெய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக எங்கு செல்கிறோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வுசெய்கிறோம்.

 

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு, இந்த ஆண்டு நடத்த முடியவில்லை. கரோனா குறைந்துவரும் நிலையில், ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரவழைத்திருக்கிறோம். முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பிறகு எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. 

 

Minister Anbil Mahesh who taught the elders to hold hands and write ..!

 

உயர்தர ஆய்வகங்கள் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள கணினி ஆய்வகங்கள், கரோனா காரணமாக பள்ளிகளில் செயல்படாததால் கணினி ஆய்வகங்களும் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளன. அங்கிருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அதுகுறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.

 

கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம் என அறிவித்திருக்கிறோம். கரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அந்தத் தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 

 

கரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும். பள்ளி இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு எடுத்துவருகிறோம். அந்தக் கணக்கெடுப்பு எடுத்த பின்பு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்