
கடந்த 2021, மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தி.மு.க பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதான தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. ஆட்சிக்கு வந்த முதல் சுதந்திர தின விழாவில் இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கடந்த பல ஆண்டுகளாக இவ்விருது வழங்கும் விழா நடத்தப்படாமலே இருந்தது. சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழேதான் செயல்படும். அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் கடந்த ஆட்சியில் இப்பொறுப்பை அ.தி.மு.க விட்டுக்கொடுத்தது. எச். ராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த பொறுப்பை விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடந்த சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைவர் போட்டியில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக, சுதந்திர தினம், குடியரசு தினங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் தலைமையகத்தில் கொடியேற்றி அவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் இறங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கத்தின் தலைமையகத்தில் கொடியேற்றி விழாக்களிலும் கலந்துகொண்டார்.
இதையடுத்து பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கும் நடவடிக்கை நடந்து வந்த நிலையில் தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வாகியுள்ளார். இதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 10 தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு அளிக்காத காரணத்தால் அன்னபோஸ்ட்டாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தற்போது பாரத சாரண சாரணியர் இயக்கம் வெளியிட்டுள்ளது.இதன் மூலம் நாவலர் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்குப் பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,“முதலில் என் மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்துப் போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.