
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு அந்தப் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அச்சிறுமியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறி புகார் செய்தனர். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், திடீரென நேற்று (17ம் தேதி) அந்தப் பள்ளியில் பெரும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீன் வேஸ் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தவறு யார் செய்திருந்தாலும், பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்திலும் இன்று வழக்கு வருகிறது. நாங்களும், நேரடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்று அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் அவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்துவருகிறோம். உயிரிழந்த மாணவியின் பெற்றோர், மறு உடற்கூராய்வுக்கும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் கேட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பும் இன்று வரவிருக்கிறது.
மேலும் செய்தியாளர்கள், ‘இந்த விவகாரத்தில் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் தகவல் தங்களிடம் இருக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார்’ என்று கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். விசாரணை நியாயப்படி நடத்தி தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு தரப்பினர், இந்தப் பள்ளி நிர்வாகி குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் சொல்லிவருகின்றனர். ஆனால், எங்களுக்கு அதுவெல்லாம் முக்கியமில்லை. எங்களை பொறுத்தவரை காரணம் என்ன என்பதும், அதற்கு யார் காரணம் என்பதும் தான். அது விசாரணையில் தெரியவந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.