
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூத்தைபார் பேரூராட்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்புப் பேருந்து வேண்டி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கூத்தைபார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இந்த கோரிக்கையை ஏற்று இன்று காலை பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூத்தைப்பார் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தைத் துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பேருந்திலும் பயணம் செய்தார்.

இந்த அரசு பேருந்து துவாக்குடி நகர் கிளை நகர பேருந்து வழித்தடத்தில் இருந்து அன்றாடம் காலை 7.40 மணிக்கு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக கூத்தைபார் வந்தடைகிறது. பின்னர் கூத்தைபார் வரும் பேருந்தானது 8:20 க்கு புறப்பட்டு கூத்தாப்பார் கிராமத்திலிருந்து திருவெறும்பூர், மார்க்கெட், பாலக்கரை வழியாக சத்திரம் நோக்கி செல்கிறது. தினந்தோறும் இரண்டு முறை இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கூத்தாப்பர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தாப்பர் பேரூராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் அரசுப் போக்குவரத்து திருச்சி மண்டலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் சுரேஷ்குமார், துவாக்குடி நகர கிளை மேலாளர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.