Skip to main content

“யார் பெரியவர் என்பதை காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

 Minister Anbil Mahesh comments on Governor RN Ravi

 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் திமுக மாவட்ட, மாநகரத் தொண்டரணி சார்பாக நடைபெறும் தலைவர் கலைஞர் புகழ் பரப்பும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலத் தொண்டரணி செயலாளர் மாஸ்டர் பெ. சேகர், திரைப்பட நடிகர் தம்பி ராமையா, கழகச் செயலாளர் மு. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நீங்கள் ஓட்டு போட்டீர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம். எந்த திட்டங்களை செயல்படுத்த முன்வந்தாலும், எங்களுக்கு இடையூறு வருகிறது. நாங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; நாங்கள் உங்களுக்காக ஒரு திட்டம் கொண்டுவர முடியவில்லை, நாங்கள் கையெழுத்து போட சென்றால் அங்கிருந்து ஒருவர் கையை இழுத்து விடுகின்றனர். நீ கையெழுத்துப் போடக் கூடாது எனக் கூறுகிறார்கள். ஓட்டு போட்டது நீங்க; நம்பி வந்தது நாங்கள்.

 

வீடு நம் வீடு, வீட்டை கட்டியது நாம், நாம்தான் வீட்டை நிர்வாகம் பண்ண வேண்டும், ஆனால்  மத்திய பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரை வீட்டு காவலாளியாக போட்டு அவர் வீட்டு சொந்தக்காரரை உள்ளே விடாமல் இருந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.  இது பெரியார் மண், அம்பேத்கர் மண். பேரறிஞர் அண்ணா, கலைஞரின் மொத்த உருவமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நாம் எதை அனுப்பினாலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார் ஒருவர். அதை நாம் திருப்பி வலியுறுத்திக் கொண்டே உள்ளோம்.  எங்க மாநிலத்திற்கான உரிமையை நாங்கள் கேட்கிறோம். மாநிலத்தின் உரிமை என்னவென்றே தெரியாமல், சிலர் செயல்படுகிறார்கள் பேசுகிறார்கள்” என்றார்.

 

மேலும், “மக்களின் நலன் சார்ந்து அரசாங்கம் நடத்த வேண்டுமே தவிர, யார் பெரியவர் என்பதைக் காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல. மக்கள் எதை நம்பி நமக்காக ஓட்டு போட்டார்களோ அதற்காக பணியாற்ற வேண்டியதற்காகத்தான் சட்டமன்றம் என்பதைத் தான் தமிழக முதல்வர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்” என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ஆர்.ஜி. பாபு, டி.பி.எஸ்.எஸ் ராஜு முகமத், மணிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார், மாநகர அமைப்பாளர் தினகரன், மாநகரத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட நகரக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Next Story

தி.மு.க. - இ.யூ.மு.லீ. இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்து!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK - iUML  distribution signature between

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை இ.யூ.மு.லீ போட்டியிட்ட ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனியே இந்த முறையும் போட்டியிடுவார் என இ.யூ.மு.லீ. கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.