mini van overturned on the road due to a tire burst accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரசித் என்பவரின் மகன் இர்ஃபான்(34). ஓட்டுநரான இவர் தர்மபுரியிலிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான குளிர்பானத்தை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் சென்றபோது மினிவேனின் பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு மினிவேன் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் இர்ஃபானுக்கு படு படுகாயம் ஏற்பட்டது. மேலும் மினி வேனில் இருந்த குளிர்பானம் சாலையில் கொட்டிச் சேதமானது.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இர்ஃபானை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.